×

116வது ஜெயந்தி விழா, 61வது குரு பூஜை விழா தேவர் நினைவிடத்தில் முதல்வர் இன்று மரியாதை: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர்

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் துவங்கியது. இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிவு மதுரை சென்றார். இன்று காலை மதுரை கோரிபாளையம் பஸ் நிலையம் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர், மதுரை அண்ணாநகர் மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, மதுரை தெப்பக்கள்ம் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பசும்பொன்னுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகின்றனர். மேலும் சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செய்ய உள்ளனர். முதல்வர் வருகைக்காக நினைவிடத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 4 டிஐஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post 116வது ஜெயந்தி விழா, 61வது குரு பூஜை விழா தேவர் நினைவிடத்தில் முதல்வர் இன்று மரியாதை: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துகின்றனர் appeared first on Dinakaran.

Tags : 116th Jayanti ,61st Guru Puja Festival ,Chief Minister ,Dewar Memorial ,Ramanathapuram ,M.K.Stalin ,Basumpon Devar Memorial ,Devar Memorial ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...